Sila Nerangalil Sila Manithargal Book
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். அதில் தேறிவிட்ட மகிழ்ச்சி எனக்கு இப்போது இருக்கிறது.
சொல்கிற முறையினால் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களைக்கூட எல்லோருக்கும் இணக்கமாகச் சொல்லிவிட முடியும் என்று இந்த நாவலை எழுதியதன் மூலம் நான் கண்டுகொண்டுவிட்டேன்.
கதிரில் தொடர்கதையாக இது வந்தபொழுதும், வந்து முடிந்த பிறகும் நூற்றுக்கணக்கான வாசகர்கள் கடிதம் எழுதி இருந்தார்கள். வெளிவந்து முடிந்த பிறகு வாசகர் கடிதங்களை அடுக்கித் தொடர் கதைக்குப் ‘புண்ணியாக வாசனம்’ நடைபெறாத முதல் தொடர்கதை இதுதானென்று நான் நினைக்கிறேன். வந்த கடிதங்களையெல்லாம் கதிர் அலுவலகத்திலிருந்து நான் வாரிக்கொண்டு வந்து விட்டேன். இதற்கு வந்த வாசகர் கடிதங்களைப் பிரசுரிக்கக் கூடாது என்கிற நோக்கமெதுவும் எனக்குக் கிடையாது.
இந்த நாவல் இன்னொரு மாதிரியான ஆட்டம். எப்படிக் காய்களின் தன்மை மாறுவதில்லையோ அதுபோல் இங்கே பாத்திரங்களின் தன்மை மாறவில்லை.
இந்த ரகசியம் தெரியாமல் பலபேர் சதுரங்கக் காய்களை வைத்துக்கொண்டு சொக்கட்டான் விளையாடினார்கள். எனவே தான் நான் இரண்டாவது ஆட்டம் ஆடினேன்.
கங்காவினுடைய பாத்திர இயல்புகளைக் கூர்ந்து படித்த வாசகர்கள் அவளுக்கு இப்படி ஒரு முடிவு ஏற்படப்போவதை முன்கூட்டியே உணர்ந்திருப்பார்கள்.
பாத்திரப் படைப்பு என்பது ஒரு பெயர் சூட்டிவிடுவதோ, அங்கவருணனை நடத்திவிடுவதோ அல்ல. மனம், அறிவு, சிந்தனை, குண இயல்பு, சூழ்நிலைகளின்போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அறிந்து அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும்.
இதிலே என் விருப்பம், உங்கள் விருப்பம் ஆகிய விவகாரங்கள் புகுந்து அந்த ‘இசைவை’க் கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் படைப்பாளிக்கு இருக்கிற பெரிய கடமை.